திருமண பொருத்தம் எப்படி கணிக்க வேண்டும் | திருமணமும் பொருத்தமும்

பதிவேற்றம் செய்த நாள் August 28, 2022   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

ஒரு பாரம்பரியமான நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் எனும் போது, நம் வாழ்க்கையில் கடைசி காலம் வரை துணையாக வரும் வாழ்க்கை துணை நல்ல படியாக அமையவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும்.

அதன்படி முதலில் நாம் பார்த்த விதிகள் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தக்கூடியதுதான். இருந்தாலும் இந்த பொருத்தத்தில் பெண்ணுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

திருமணத்தில் தாரை வார்த்து கொடுக்கும் போது கூறப்படும் மந்திரத்தின் உட்பொருள் மிக முக்கியமானதாகும். இது ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டின் பந்தத்தை அறுத்து பின்னாளில் பிறந்த வீட்டுடனே சம்பந்தம் பேசுமளவிற்கு உரிமையையும் அளிக்கிறது.

தாரை வார்க்கும் போது இந்த பெண்ணை நாங்கள் பெற்று கண்ணுக்கு கண்ணாக வளர்த்தோம், இன்று முதல் இந்த கன்னிகையை உங்கள் உடைமையாக்கி விட்டோம். இனி, இந்த பெண்ணின் சகல உரிமைகளும் சுக துக்கங்களும் உங்களையே சாரும்.

கன்னிகா தானம்

இந்தப் பெண் உங்கள் உடைமையாகி விட்டதால் இவளை உங்கள் பெண் போலவே பேணிக்காத்து, உங்கள் வீட்டு மகாலட்சுமியாக ஏற்று, இவள் மூலம் உங்கள் குடும்பத்துக்கான வாரிசுகளை பெற்றெடுத்து, சகல செளபாக்கியங்களோடு, சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துவதுடன், இனி எங்களுக்கு இந்தப் பெண்ணுடன் பிறப்பு தொடர்பு இல்லை என்று உறுதி கூறி தாரை வார்த்து உங்களுக்கு உடைமையாக்கிவிட்டோம் அல்லது கன்னிகா தானம் ஆக்கிவிட்டோம், என்று கூறி தாம்பூலம் தேங்காய் பழம் பூவுடன் தட்சிணை அட்சதை பெண்ணைப் பெற்றவர்கள் நீர் விட்டு தாரை வார்த்து அளித்து விடுவார்கள்.

அதன்பின் ஆண் மாங்கல்ய தாரணம் செய்து தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டு அதன்பிறகு
சாஸ்திர ரீதியாக பெண்ணின் பிறந்த வீட்டு தொடர்பு அறுபட்டு புகுந்த வீட்டின் கிரக லட்சுமியாகி விடுவதால்
பெற்றோருக்கு தான் பெற்ற பெண்களுக்கு தர்ப்பணம் எனும் பித்ரு கடன்கள் செய்யும் உரிமை இல்லை என்பதாகும்.

அதேபோல் திருமணம் வரையிலும் பெற்றோருக்கு பிள்ளையாக அவர்களின் சம்ரட்சணையில் பிரம்மச்சாரியாக இருந்த ஆண்மகன் திருமணம் எனும் விவாக பந்தத்தின் மூலம் குடும்பஸ்தனாகி மனைவியின் துணையுடன் பெற்றோர்களின் சம்ரட்சணையாக கடந்து தனிப்பட்டு கர்மாக்கள் எனும் வாழ்க்கை கடமைகளை செய்ய வேண்டும்.

எனவே பிரம்மச்சரியத்தை விடும் சடங்கான திருமணம் எனும் விவாகத்திலிருந்தே மனிதன் நித்திய கர்மாக்கள் துவங்குகிறது.

விவாகம்
நிஷேகம்
கர்ப்பாதானம்
பும்சவனம்
சீமந்தம்
ஜாதக கர்மம்

புண்யாஹவசனம்
நாமகரணம்
தோளாரோஹணம்
அன்னபிராசனம்
செளளம்
கர்ணவேதனம்

அக்ஷப்ராப்பியம்
உபநயனம்
நித்திய கர்மாக்கள்
கிருஹஸ்தாசிரம தர்மம்
அபரக்கிரியைகள்

இவ்வளவு காரியங்களையும் ஒரு ஆண் மகனானவன் குடும்பஸ்தன் ஆகி மனைவியின் கைபிடித்தே
செய்ய வேண்டி உள்ளது.

அப்படிப்பட்ட ஆதாரம் தான் தாரம் என்பதாகும்.

தாரம் எனும் மனைவி

தாரம் எனும் மனைவிக்குத் தான் இல்லத்தரசி என்ற பட்டயம் உண்டு. கணவனுக்கு இல்லத்தரசன் என்ற
பட்டப்பெயர் தரப்படவில்லை, காரணம் சம்பாதித்து போடுவதுடன் ஒரு கணவனின் கடமை முடிந்து விட்டது.

ஆனால் மனைவியின் கடமைக்கு எல்லை இல்லை. அந்த குடும்பம் முழுவதையும் பேணிக்காப்பவள் மனைவிதான். மனைவி சரியாக இருந்தால் கணவன் சரியில்லை என்றாலும், குடும்பத்தை மனைவி உருப்பட வைத்து விடுவாள்.

ஆனால் மனைவி சரியில்லை என்றால் அந்த குடும்பம் உருப்படாது. கணவனால் குடும்பத்தை உருப்பட வைப்பது என்பது கடினமானதாகும்.

கணவன் சரியில்லாமல் மனைவி சரியாக இருக்கும் குடும்பம் எப்படியும் ஒப்பேறி விடும். மனைவிமார்கள் தன் சாமர்த்தியத்தால் ஒப்பேற்றி விடுவாள்.

இல்லம் எனும் வீட்டைப் பொறுத்தவரை மனைவி ஆட்சிதான். எனவே வீட்டுப் பொறுப்பு பெண்ணுக்குத் தான் அதிகம் என்பதாலேயே தான் மனு தர்மத்தில் பெண்ணுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கும், பெண்ணுக்கும் தகுதியான ஆண்தானா
என்பதை அறிந்து கொள்வதற்கும் தான் திருமண பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம் ஆகின்றது.

வாழ்க்கை துணையை எப்படி கணிக்க வேண்டும்

உண்மையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நல்ல அளவில் திருமண பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம் என்றபோதும் மூல நூல்களின் பரிச்சயம் இல்லாமல் வெறுமனே நட்சத்திர அடிப்படையில்
பஞ்சாங்க அடிப்படையை வைத்துக் கொண்டு அதிலும் கூட பஞ்சாங்க நடைமுறையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களையும் அதாவது விதிவிலக்குகளையும் கூட சரிவர புரிந்து கொள்ளாமல் சில மேதாவி ஜோதிடர்கள்
தனக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வதால் ஏற்படும் விளைவுகளால் தான் சரியான இணைவுகள் தவிர்க்கப்படுகின்றது.

அதேசமயம் தவறான இணைப்புகள் ஏற்படுவதால் மணவாழ்க்கை பாதிக்கப்பட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெருகி வருகின்றன.

மேலும் ஒரு ஜோதிடரிடம் 100 ரூபாய் மட்டுமே அளித்து இவருக்கு இது போதும் என்று முடிவு செய்து இரண்டு ஜாதகங்களை திருமண பொருத்தம் பார்க்க கொடுத்தால்,

நட்சத்திர பொருத்தங்கள்

ஜாதக பொருத்தம்

கிரக தோஷம்

தசா புக்தி சந்தி நடக்கும் காலங்கள்

குடும்ப பாவம்

சுக பாவம்

புத்திர பாவம்

ரோஹ பாவம்

களத்திர பாவம்

ஆயுள் பாவம்

தாம்பத்ய சயன பாவம்

இத்தனையும் அலசி ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் காணிக்கை தொகைக்கு ஜோதிடர் நேரம் ஒதுக்கி பார்ப்பது கடினம்.

ஐந்து நிமிடங்களுக்குள் ஜாதகத்தை பார்த்து பொருத்தம் உள்ளதா என்பதை கூறிவிடுவார்கள். அவர்கள் எந்த அடிப்படையில் பொருத்தம் பார்த்து உடனே பலன் கூறுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தனிநபர் ஜாதகத்திற்கு பலன் கூறுவது எளிது, ஆனால் திருமண பொருத்தம் ஜாதகங்கள் அவ்வளவு எளிதல்ல. அதில் அநேக விதிமுறைகள், அதேசமயம் அநேக விதிவிலக்குகளும் உள்ளன.

தவறாக பொருத்தங்கள் கூறி பின்னாளில் மானபங்கம் அடைந்த ஜோதிடர்கள் ஏராளமாக உள்ளனர். ஜோதிட பலன்களில் உள்ளதை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டுமானால் கொடுக்கும் தொகையும், பார்க்கும் நேரமும் பத்தாது.

பஞ்சாங்கத்தில் உள்ள பத்து பொருத்தங்களை மட்டும் பார்த்து செல்லலாம். வேறுவழியில்லை.

திருமண பொருத்தத்தில் நட்சத்திர பொருத்தங்கள் என்னதான் பலன்கள் கூறுகின்றன..?

மேலும் ஜாதக பொருத்தம் என்ன பலன்கள் கூறுகின்றன?

அதில் உள்ள விதிமுறைகள் மற்றும் விதிவிலக்குகள் என்னென்ன வகையில் அமைகின்றன?

கிரக தோஷங்கள் என்ன செய்யும்?

ஒரு திருமண பொருத்தம் ஜாதகங்களை எவ்வாறெல்லாம் அலசி ஆய்வு செய்ய வேண்டும்?

என்ற கேள்விகளுக்கெல்லாம் சாஸ்திரம் கூறும் விடைகளை. தொடர்ந்து காண்போம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: திருமண பொருத்தம் எப்படி கணிக்க வேண்டும் | திருமணமும் பொருத்தமும்

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares