தேய்பிறை அஷ்டமி வழிபாடு நல்லதா?
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.
அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய்.
இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய்.
அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்)
இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும்.
சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.
தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.